நானும் மரணித்திருப்பேன் - ஸ்டாலின் உருக்கம்!

ஆகஸ்ட் 14, 2018 664

சென்னை (14 ஆக 2018): கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்கவில்லை என்றால் என்னையும் தலைவர் அருகில் புதைத்திருப்பீர்கள் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுகவின் அனைத்து முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதில் பேசிய ஸ்டாலின், தலைவர் இல்லாமல் நிகழ்ச்சி நடப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. திமுகவினர் தலைவரை இழந்து இருக்கிறார்கள். நான் தலைவரை மட்டுமில்லை, தந்தையையும் இழந்து உள்ளேன்.

தலைவர் கருணாநிதி, தன்னுடைய அண்ணன் அண்ணாவின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவருடைய ஆசை. மருத்துவர்கள் கருணாநிதியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று கூறிய போது, நாங்கள் கண்ணீர் மல்க பேசிக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தலைவரின் ஆசையை நிறைவேற்ற, அரசிடம் பேசுகிறோம். ஆனால் அரசு எங்களிடம் எதிர்மறையான பதிலை அனுப்பியது.

அதன்பின் முதல்வரை அதுகுறித்து விவாதிக்க சென்றோம். ஆனால், என்னை திமுக உறுப்பினர்கள் வர கூடாது என்று கூறினார்கள். ஆனால் நான், எனக்கு மானம் போனால் கூட பிரச்சனை இல்லை. நான் முதல்வரை சந்தித்து பேசுவேன். நான் கருணாநிதிக்காக யாரையும் சந்திக்க, எதையும் இழக்க தயார். வெட்கத்தை விட்டு சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம் கேட்டேன். ஆனால் அரசு மறுத்துவிட்டது.

சில நிமிடத்தில் தலைவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானது. உடனே அரசு, எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. உடனே வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றம் போகலாம் என்றார். இரவே நீதிமன்ற படியேறினோம்.

வழக்கறிஞர்களின் திறமையான வாதத்தால் வெற்றி கிடைத்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி அது. ஒருவேளை எதிர் மறையான தீர்ப்பு வந்திருந்தால் என்னையும் திமுக இழந்திருக்கும். தலைவருக்கு அருகில் என்னையும் புதைக்கப் பட்டிருக்கக் க்கூடும்" என்று உருக்கமாக பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...