தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீசில் சரண்!

ஆகஸ்ட் 14, 2018 910

திருச்சி (14 ஆக 2018): தலைமறைவான கல்லூரி மாணவியும் பள்ளி மாணவனும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடர்ந்து மாணவியின் தாய் தனது மகளை அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், மாணவியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்ட மாணவனின் அக்கா கணவர் பாலசுப்பிரமணி குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த பாலசுப்பிரமணி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தச் சூழலில் மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வந்த வையம்பட்டி போலீஸார், மாணவனின் அக்கா மற்றும் அவரது தாய் இருவரையும் மருத்துவமனையிலிருந்து விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு பாலசுப்பிரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், போலீஸாரைக் கண்டித்து வையம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட மாணவியின் தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இப்படி கடத்தப்பட்டதாக சொன்ன மாணவியின் தாயும், கடத்தியதாக சொன்ன மாணவனின் மாமாவும் மாறி மாறி விஷம் குடித்ததால் போலீஸார் இந்த வழக்கை விசாரிப்பதில் திகைத்துப்போயுள்ளனர்.

விஷம் குடித்த 2 பேரும் மனப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, வையம்பட்டி போலீஸார் மாணவனின் தாய் பழனியம்மாள், அக்கா தீபா, அவரது கணவர் பாலசுப்பிரமணி மற்றும் மாணவன் ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக சொன்ன கல்லூரி மாணவியும், பிளஸ் 2 மாணவனும் நேற்று இரவு வையம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் இன்று மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...