முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

ஆகஸ்ட் 16, 2018 542

புதுடெல்லி (16 ஆக 2018): முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சில நாள்களுக்கு 138 அடியாக குறைக்க முடியுமா? எனத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க தமிழக முதலமைச்சருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே உள்ளது என்றும் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப் பட்ட மனுவில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 138 அடியாக குறைக்க வேண்டும். அணை நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அணையில் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்' எனக் கூறி இடுக்கி பகுதியைச் சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், `அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தால் தற்போதுள்ள நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்' எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது பேசிய நீதிபதிகள், ``அணைப் பாதுகாப்பில்லை என கற்பனையாக கூற வேண்டாம். சரியான ஆதாரங்களை தாக்கல் செய்து வாதங்களை முன்வையுங்கள்" என மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ``கனமழை பெய்து வருவதால் நீர்மட்டத்தைக் குறைக்க முடியுமா?" என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், `அணை நிலவரம், பாதுகாப்பு, இயற்கை பேரிடர் ஆகியவை குறித்து மத்திய, கேரளா, தமிழக அரசு அதிகாரிகள் அடங்கிய அணை துணைக்கண்காணிப்புக் குழு நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறி வழக்கு விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...