நான் கொலை செய்யப் படலாம் - மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார்!

ஆகஸ்ட் 22, 2018 607

சென்னை (22 ஆக 2018): பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் அளித்துள்ள புகாரில், “ஊழியின் நடனம் என்னும் தலைப்பில் இயற்கைச் சீற்றம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை தேவி என்று அழைத்து கவிதை எழுதி இருந்தேன். அதனை இந்து மதத்துக்கு எதிரான கவிதை என்று கூறி, எச். ராஜா தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் வருகிறார்” என்று கவிஞர் மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.

இப்புகார் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், “இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்” என்று எழுதியுள்ளார்.

மேலும் “எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க போலிசார் மறுத்துவிட்டனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் திமுக-வைச் சேர்ந்தவர் என்பதும் அக்கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...