உடன் பிறப்புகளுக்கு நம்பிக்கை தரும் ஸ்டாலினின் பேச்சு!

ஆகஸ்ட் 28, 2018 546

சென்னை (28 ஆக 2018): இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்களின் ’அன்பு உடன்பிறப்புகளே’ என்று தன் உரையை தொடங்கினார். ஒரு பேர் உண்மையை சொல்லி என் உரையை தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல் பேச தெரியாது, பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளவும் தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவோடு இருக்கிறேன். இது பெரியார், அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக்கூடிய விதை.

வாழும் திராவிட தூணாக இருப்பவர் பொதுச்செயலாளர் க.அன்பழகன். கலைஞர் தன் அண்ணனாக பொதுச்செயலார் க.அன்பழகனை ஏற்றுக்கொண்டார். கலைஞரின் அண்ணனான பொதுச்செயலாளர் க.அன்பழகன் எனக்கு பெரியப்பா ஆவார். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது நூறு மடங்கு கடினமானது. பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு கடினமானது. தலைவராக தேர்வு பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்.

என்னை பள்ளி பிள்ளையாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். எனது வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். கலைஞரின் மகன் என்று சொல்வதை விட கலைஞரின் தொண்டன் என்பதில் தான் பெருமை கொள்கிறேன்.

தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். திமுக தொண்டர்களின் ஒத்துழைப்புடன் மோடி அரசை அகற்றுவோம். தமது வாழ்நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு என்றே வாழ்வேன்.

இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதுகெலும்பில்லாத மாநில எடப்பாடி அரசை தூக்கி எறிவோம் என அவர் சூளரை ஏற்றார்.

ஸ்டாலினின் இந்த பேச்சால் பாஜகவுடன் நட்பு கொள்ள வாய்ப்பு உள்ளதோ என நினைத்து குழப்பத்தில் இருந்த உடன் பிறப்புகளுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...