தனியாக இருந்த இளம் பெண்ணை பர்க்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

ஆகஸ்ட் 29, 2018 845

நாகர்கோவில் (29 ஆக 2018): ஃபேஸ்புக் நட்பு மூலம் வீட்டில் தனியாக இருப்பதாக கூறிய பெண்ணை பார்க்கச் சென்றவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை பாருங்கள்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன். ஜெராக்ஸ் கடை நடத்திவரும் இவருக்கு ஃபேஸ்புக்கில் பெண் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக ஃபேஸ்புக்கிலேயே பழகி வந்தனர். ஆனால் முகத்தை பார்த்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த பெண் தான் நாகர்கோவிலில் வசிப்பதாகவும் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் என்றும் கூறியுள்ளார். கணவர் வீட்டில் இல்லாததால் தான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன் என்றும் கூறிய அவர் வீட்டிற்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று தனசேகரனுக்கு ஆசைக் காட்டியுள்ளார்.

இதனை நம்பிய தனசேகரன் நாகர்கோயிலுக்குச் சென்றார். அப்போது தனசேகரனிடம், தன்னால் வர முடியவில்லை ஆகையால் தன்னுடைய தம்பியை அனுப்பி வைக்கிறேன். அவருடன் வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று அந்தப்பெண் கூறியுள்ளார்.

அந்த பெண் கூறியபடியே தனசேகரனை சந்தித்த இளைஞர் ஒருவர் அவரை தனது அக்கா அழைத்து வரசொன்னார் எனக்கூறி தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அந்த இளைஞர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனசேகரனை அழைத்துச் சென்றார். மேலும் அவரை மிரட்டி ஏ.டி.எம். கார்டு, இரகசிய எண் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டார்.

பின்னர் அவரது கணக்கில் இருந்து ரூ.83 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொண்டார். பின்னர், தனசேகரனை அங்கேயே விட்டுவிட்டு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து தனசேகரன் வடச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தனசேகரனுடன் ஃபேஸ்புக்கில் பழகியவர் உண்மையிலேயே பெண் தானா? அல்லது பெண் போல் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...