ஸ்டாலினின் பதவியை தட்டிப்பறிக்கும் உதயநிதி!

August 31, 2018

சென்னை (31 ஆக 2018): ஸ்டாலின் திமுக தலைவரான நிலையில் அவரது தளபதி பதவியை நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தட்டிப் பறிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சமீபகாலமாக, திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக தொடர்பான அரசியல் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் தவறாமல் பங்கேற்கிறார். அதோடு, அவரை மூன்றாம் கலைஞர் என புகழ்ந்து உடன் பிறப்புகள் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவங்களும் நடந்தது.

அதேபோல், கருணாநிதியின் மறைவை அடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் தொகுதியில் உதயநிதி களம் இறக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது. ஆனால், குடும்ப அரசியல் என விமர்சிப்பார்கள் என கருதி அந்த முடிவை ஸ்டாலின் கைவிட்டு விட்டதாகவும், முதலில் திமுகவில் அவருக்கு ஒரு பதவியை கொடுத்துவிட்டு, பின்னர் தேர்தல் அரசியலுக்கு கொண்டு வரலாம் என ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உதயநிதியின் புகழ் பாடி வைக்கப்பட்ட பேனர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. உதயநிதி திமுகவின் உறுப்பினர் மட்டும்தான். அவர் எந்த பதவியிலும் இல்லை. வழக்கமாக கட்சி சார்பாக விழாவோ அல்லது பொதுக்கூட்டமோ நடைபெறும்போது கட்சி தலைமை, முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை வாழ்த்தி வாசகங்கள் அமைக்கப்பட்ட பேனர்கள் வைப்பது வழக்கம்தான்.

ஆனால், கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத உதயநிதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்மன்றம் சார்பில் கூட அந்த பேனர் வைக்கப்படவில்லை. மாறாக, காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களில் ‘வருங்கால வசந்த நாயகரே, தொண்டாற்ற பிறந்த தோழமையே’ என வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

ஸ்டாலினின் அனுமதி பெறாமல் இந்த பேனர்கள் வைக்கப் பட வாய்ப்பு இல்லை என்பதால் அடுத்த தளபதி உதயநிதி ஸ்டாலின் தான் என்கின்றனர் நெருங்கிய வட்டாரங்கள்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!