குழந்தைகளை கொன்று விட்டு தப்பியோடிய தாய் - கள்ளக் காதல் காரணமா?

September 01, 2018

குன்றத்தூர் (01 செப் 2018): குழந்தைகள் இரண்டையும் கொன்று விட்டு தாய் தப்பியோடிய விவகாரம் குறத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி அபிராமி, விஜய் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். முதல் குழந்தை அஜய்-யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

நேற்று இரவு விஜய் வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர். குழந்தைகள் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அதன் காரணமாகதான் நேற்று இரவு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என்ற கோணத்திலும் குன்றத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அபிராமியை கைது செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!