அதிமுக எம்.எல்.ஏவின் வருங்கால மனைவி வேறொருவருடன் மாயம்!

செப்டம்பர் 03, 2018 1296

ஈரோடு (03 செப் 2018): அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் அவரது காதலருடன் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43). இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம் பெண்ணுக்கும் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள் வீட்டிலும் மற்றும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வும் அவரது உறவினர்களும் கடந்த ஒரு வாரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.

இவர்களது திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடக்க இருந்தது. திருமணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள் சந்தியா தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். மணமகள் இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று வீட்டில் கேட்டபோது சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறி கொண்டு சென்றார். ஆனால் மணமகள் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை மாயமாகி விட்டார். கடந்த 2 நாட்களாக சந்தியாவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது மகள் அவளது அக்கா வீட்டுக்கு போய்வருவதாக கூறி கொண்டு சென்றவள் எங்கு சென்றாள்? என்று தெரியவில்லை. அவளை கண்டு பிடித்து தாருங்கள் என்று கூறி உள்ளார்.

மாயமான மணமகள் சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் பழகி வந்துள்ளார். அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன்தான் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...