அதிமுக எம்.எல்.ஏக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம்!

September 05, 2018

ஈரோடு (05 செப் 2018): ஈரோடு எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் மாயமான நிலையில் தற்போது அவர் மீட்கப் பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான ஈஸ்வரனுக்கு, உக்கரம் ஊராட்சி மில்மேடு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி தம்பதியின் மகள் சந்தியாவை திருமணம் செய்துவைக்க நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை வருகின்ற 12-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்த திருமணத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவைப்பார்கள் என்று பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டன. ஆனால் கடந்த 1-ம் தேதி வெளியே சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை என அவரின் தாயார் தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், மணப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனது கல்லூரி தோழி சத்யா என்பவரது வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காணாமல் போன சந்தியாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அப்போது 43 வயதாகும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தன்னை விட 20 வயது மூத்தவர் என்றும் அவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாகவும் நீதிபதியிடம் சந்தியா வாக்குமூலம் அளித்தார்.

இதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, விருப்பம் இல்லாமல் பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தவறு என்றும், சந்தியாவை திட்டவோ அவதூறாக பேசவோ கூடாது என்றும் அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதனிடையே, எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே தேதியில், வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!