சின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் கைது!

September 09, 2018

சென்னை (09 செப் 2018): சொகுசு கார் வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியும் சின்னத்திரை நடிகையின் கணவருமான சக்தி முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்த அனிஷா என்கிற பூர்ணிமா வயது 27, இவரது கணவர் சக்தி முருகன். பூர்ணிமா பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார், சின்னத்திரை நாடகத்திலும் நடித்துள்ளார். ஸ்கை எக்யூப்மன்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் மின் சாதனப் பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். அதே போல் ஈவண்ட் மேனஜ்மெண்ட் நிறுவனமும் நடத்தி வந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கள் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளுக்கு கே.கே.நகரை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரின் நிறுவனத்தில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 103 வீட்டு உபயோக ஏ.சி-களை வாங்கியுள்ளனர். அதற்கான பணம் தராமல் ஏமாற்றி வந்த இருவரும், சில நாட்கள் கழித்து காசோலை கொடுத்துள்ளனர். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியதால், பிரசாந்த் குமார் நேரில் சென்று கேட்ட போது தர முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பூர்ணிமா மற்றும் அவரது கணவரின் தம்பி ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சக்தி முருகன் தலைமறைவானார்.

இதேபோல் இந்த மோசடி தம்பதி கடந்த ஆண்டு நெசப்பாக்கத்தில் ஷை லக்ஸரி என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம், பென்ஸ் ஆடி, பி.எம்.டபுள்யூ போன்ற சொகுசு கார்களை தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் இணைத்து வெளியில் வாடகைக்கு இயக்கி வந்துள்ளனர்.

ஒ.எல்.எக்சில் தங்களுடைய கார்களை விற்பதற்காக விளம்பரம் கொடுத்தவர்களை சக்திமுருகன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய ரமேஷ் அணுகி தங்கள் நிறுவனதில் கார்களை இணைத்து கணிசமான தொகையயை வாடகையாக பெறலாம் என கூறியுள்ளார். இதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொகுசு கார்களை இணைத்து அனைத்து அசல் ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளனர். இதனையடுத்து காரின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அதன் அசல் ஆவணங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய இவர்கள் டிராவல்ஸ் நிறுவனத்தை கடந்த மார்ச் மாதம் மூடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்களின் உரிமையாளர்களில் 25 பேர் தங்களை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் ரமேசை கைது செய்தனர். கார் மோசடியில் தலைமறைவாக உள்ள சக்தி முருகன் மற்றும் ஹரீஷ் இன்னும் சிலரை போலிசார் தேடிவந்த நிலையில், கார்களை சக்தி முருகனிடம் பெற்று வெளியே விற்றுகொடுத்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த 16 கார்களை போலிசார் மீட்டனர்.

தலைமறைவாக இருந்த சக்திமுருகன் நேற்று சென்னை வந்துள்ளான் என போலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சக்திமுருகணை போலிசார் கைது செய்தனர் அவரிடமிருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும் சில கார்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளதால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!