தாமரை ஆளவில்லை என்றால் அது மாற்றாந்தாய் - நமது அம்மா பாய்ச்சல்!

September 11, 2018

சென்னை (11 செப் 2018): தாமரை ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாயை போல பார்க்கிறது என்று நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.

அதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான நமது அம்மாவில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

கதர் கட்சி ஆண்ட காலத்திலான ஏராள ஊழல்கள் இப்போது இல்லைதான்.

* ஊழல் இல்லை என்கிற அதே வேளையில்மனிதன் நிம்மதியாய் வாழும் சூழலில்லை என்கிற அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையேற்றம் பெருங்கவலை தருகிறதே...

* எரிபொருள் விலை ஏறினால் எல்லா விலையும் ஏறுமே என்கிற சாமானியன் கவலை சர்க்காருக்கு புரியலையே...

* சிலிண்டர் விலைறேற்றம் ஏறத்தாழ ஆயிரத்தை தொடும் நிலையில் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழக்குதே... நித்திரை துறக்குதே...

* அடுப்பெரியும் அதே வேளை சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கோ அடி வயிறும் எரியுதே... இதை அறியாதது போல மத்தியில் ஆளும் அரசு அபாரமாய் நடிக்குதே...

* உலகத்தின் வர்த்தகம் பெரும்பாலும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் என்றிருக்க... இதுவரை காணாத இந்திய பணத்தின் வீழ்ச்சி ஏற்றுமதி செய்வோரை ஏகத்துக்கும் அழிக்குதே... இதனால் ஆட்குறைப்பு வேலை இழப்பு ஏராளமாய் நடக்குதே....

* ஒரு புறம்... வருமான வரி கடுமை. மறுபுறம்... இவ்வுலகில் இல்லாத அளவுக்கு இருபத்தெட்டு சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வசூலிக்கும் கொடுமை...

இந்த வரிவிதிப்பு வதையில் இருந்து... பெட்ரோல்- டீசலுக்கு விலக்கு தரமாட்டோம் என்கிற பிடிவாத நிலைமை....

* மேலும் தாமரை ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிற சிறுமை... அத்தனையும் சேர்ந்துதான் ஆவேசம் கொள்ளச் செய்யுதோ ஆகாய விமானத்திலும் குழாயடிச் சண்டைக்கு அடிப்படை ஆகுதோ....

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Search!