விநாயகர் ஊர்வலத்தின் போது இருதரப்பாரிடையே மோதல்!

செப்டம்பர் 14, 2018 974

தென்காசி (14 செப் 2018): நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம் சென்றபோது இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

வருடந் தோறும் எந்த மத ஊர்வலத்திற்கும் இல்லாத பரபரப்பு விநாயகர் ஊர்வலத்திற்கு இருந்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் நேற்று மொத்தம் 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் பிரதிஷ்டை செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

ஊர்வலம் மேலூர், பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக பெண்கள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு 9.30 மணி அளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அங்கு இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது கைகலப்பாக மாறியதில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் இந்த மோதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல் வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. 40 இருசக்கர வாகனம், 20 கார்கள் உடைக்கப்பட்டன.

பிறகு போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். விநாயகர் சிலைகளும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளிலோ, மசூதி இருக்கும் பகுதிகளிலோ விநாயகர் ஊர்வலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை இருந்துவரும் நிலையில் போலீசாரின் மெத்தனப்போக்கே இந்த கலவரத்திற்கு காரணமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...