இதற்கெல்லாமா கைது செய்வார்கள் ? - பிரகாஷ் தம்பதியினருக்கு நிகழ்ந்த கொடுமை!

செப்டம்பர் 16, 2018 760

நியூயார்க் (16 செப் 2018): குழந்தையை சரிவர பராமறிக்கவில்லை எனக் கூறி சேலம் தம்பதிகள் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

சேலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் செட்டூர். இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 6 மாதங்கள் முன்பு இரட்டை குழந்தை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் ஹிமிஷா. பிரகாஷ் தனது குடும்பத்தோடு புளோரிடாவில் வசித்தபடி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ஹிமிஷாவின் இடது கையில் வீக்கம் ஏற்பட்ட நிலையில் சில வாரங்கள் முன்பாக, புளோரிடாவின் ப்ரோவர்ட் கன்ட்ரியிலுள்ள, மருத்துவமனையொன்றுக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர். அவர்களும் பல சிகிச்சைகள் அளித்துள்ளனர். இறுதியாக முழு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் செகண்ட் ஒப்பினியனுக்காக பிரகாஷ் தம்பதி, மற்றொரு மருத்துவமனையை நாட முடிவு செய்தனர். எனவே டாக்டர்கள் பரிந்துறைத்த எந்த சோதனைகளையும் அவர்கள் செய்யவில்லை. இதற்காக மருத்துவமனை நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளது. குழந்தையை பராமரிப்பதில் மெத்தனம் காட்டிய குற்றச்சாட்டின்கீழ், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பிரகாஷையும், மாலாவையும் போலீசார் கைது செய்து, போர்ட் லவுடர்டேல் பகுதியிலுள்ள சிறையில் அடைத்தனர்.

மேலும், பிரகாஷின் குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கொண்டு சென்றுவிட்டது. இதனிடையே, 30,000 டாலர்கள் அளித்து பிணையில் வெளியே போகலாம் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. பணம் இல்லாததால் உறவினர்களிடமிருந்து பணத்தை திரட்டி இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

பொதுவாக மெடிக்கல் இன்சூரன்ஸில் எல்லாவிதமான மருத்துவ சோதனைகளும் செய்ய முடியாது. அதற்காக சொந்த செலவு செய்ய வேண்டும். இதனால் பொருளாதார நெருக்கடி உள்ள பெற்றோர் வேறொரு மருத்துவ மனையை நாடுவது சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் அமெரிக்காவில் இது ஒரு பெரிய குற்றமாக கருதப் படுவது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே அமெரிக்காவில் சிக்கலில் இருக்கும் பிரகாஷ் தம்பதியினரை மீட்டுத் தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பிரகாஷின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...