விநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்கள் பலி!

செப்டம்பர் 16, 2018 1052

திருச்சி (16 செப் 2018): காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த போது நீரில் மூழ்கி மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் தா. பேட்டையை அடுத்த மேட்டுப் பாளையத்தை சேர்ந்த வடிவேல் மகன் சாமிநாதன், 16 வயதான இவர் +1 பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று காவிரி கரையில் விநாயகர் சிலையை கரைக்க கூட்டமாக எடுத்துச் சென்றார். முசிறி கொக்கு வெட்டியான் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் நண்பர்களுடன் இணைந்து சாமிநாதன் சிலையை கரைத்தபோது புதை மணலில் மூன்று மாணவர்கள் சிக்கினர். அதில் இருவர் காப்பற்றப் பட்டனர். ஆனால் சாமிநாதன் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அதேபோல நெய்வேலி அருகே உள்ள கைக்கிளார்குப்பம் தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார்(வயது 16). இவரும், 30–வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஆதிமூலம் மகன் மணிகண்டன்(17) என்பவரும் நண்பர்கள்.

நெய்வேலி 10–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அஜித்குமார் பிளஸ்–1, மணிகண்டன் பிளஸ்–2 படித்து வந்தனர். சதுர்த்தி விழாவையொட்டி அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து 3 நாட்கள் ஆகிவிட்டதால் அதனை கரைக்கும்படி பெற்றோர் கூறினர். அதன்படி அஜித்குமாரும், மணிகண்டனும் நேற்று மாலை தங்களது வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு கைக்கிளார்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ஏரியில் ஆழம் அதிகமாக உள்ளது. எனவே ஏரிக்குள் இறங்க கூடாது என்று கூறினர். உடனே 2 பேரும், ஏரிக்கரையில் நின்றபடி விநாயகர் சிலைகளை கரைத்தனர். அப்போது அவர்களுக்கு ஏரியில் குளிக்க ஆசை ஏற்பட்டது.

எனவே 2 பேரும் அங்கிருந்து 50 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று, பொதுமக்கள் இல்லாத இடத்தில் ஏரியில் இறங்கி குளித்தனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் ரே‌ஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிக் கொண்டு வந்த தொழிலாளர்கள், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், லாரியை நிறுத்திவிட்டு ஏரிக்கு சென்றனர். அதற்குள் மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோர் ஏரியில் மூழ்கினர். இருப்பினும் தொழிலாளர்கள் ஏரிக்குள் இறங்கி 2 பேரையும் மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அஜித்குமாரும், மணிகண்டனும் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின் போது சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி வட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பதற்காக போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த 20 இளைஞர்கள், விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க இறங்கியுள்ளனர். அப்போது 4 பேர் நீருக்குள் மூழ்கினர். அதில், ஜீவா என்ற கல்லூரி மாணவர், ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மாயமான இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...