ஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு!

செப்டம்பர் 18, 2018 557

சென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் எச்.ராஜாவின் இச்செயலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தது. மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...