எஸ் ஐ மகள் விபத்தில் மரணம் - கொலையா?

செப்டம்பர் 26, 2018 626

சென்னை (26 செப் 2018): சென்னையில் எஸ் ஐ மகள் விபத்தில் பலியாகியுள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப் பட்டிருக்கக் கூடும் என்று எஸ் ஐ போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சவுகார்பேட்டை திருப்பள்ளி தெருவைச் சேர்ந்தவர் துளசிங்கம். சென்னை வடக்குக் கடற்கரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக உள்ளார். இவரின் மகள் ரம்யா. 28 வயதாகும் இவருக்குத் திருமணமாகவில்லை. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் பியூட்டிஷனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார். யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த மினி வேன் ஸ்கூட்டியின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரம்யாவுக்கு முகம், தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ளவர்கள் ரம்யாவை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸார் பட்டாபிராமைச் சேர்ந்த மினிவேன் டிரைவர் பழனியிடம் விசாரணை நடத்தினர். அவர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், அஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் உள்படப் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ரம்யாவின் தந்தை சிறப்பு எஸ்.ஐ துளசிங்கம் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் பரபரப்பு தகவல்களை புகாராகக் கொடுத்துள்ளார்.

அதில், ‘‘எனது மாமனாரான திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் அவரின் மகன் ஆகியோர் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி ஆள் வைத்து எனது மகளின் வாகனத்தின் மீது ஏற்றிக் கொலை செய்து விட்டனர். ஸ்டண்ட் மாஸ்டரின் மகளைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன். எனது மகள் தாத்தா வீட்டிலேயே வசித்து வந்தார். பேத்தி என்பதால் எனது மாமியார் ரம்யாவை பாசமாக வளர்த்து வந்தார். மாமியார் இறந்த பிறகு குடும்பத்தில் சொத்துப் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ரம்யாவை வீட்டை விட்டு விரட்ட முயன்றனர். இதில் தகராறு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்னை இருந்து வருகிறது. எனவே என் மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து யானைகவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.ஐ மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...