பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் எடப்பாடி - ஸ்டாலின் விளாசல்!

செப்டம்பர் 27, 2018 567

சென்னை (27 செப் 2018): பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில், பெண் எஸ்.பியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஐ.ஜி.முருகன் மீது அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ``பணியாற்றும் அலுவலகத்திலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண் எஸ்.பி கொடுத்த புகாரின் மீது - அதன் கடுமையான தன்மை கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையை மறந்து, மனசாட்சி உறுத்தல் கடுகளவும் இன்றி - ஒய்யாரமாகக் கால்மேல் கால்போட்டு அமர்ந்து கொண்டு, தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற தரங்கெட்ட எண்ணத்துடன், அந்தப் புகாருக்குள்ளான ஐ.ஜி. மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அந்த அதிகாரியைக் காப்பாற்றிவரும் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பாலியல் புகாருக்குள்ளான ஐ.ஜி. திரு.முருகனை, பிரதி உபகாரம் செய்திடும் வகையில், பாதுகாக்கும் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சி செய்வது, ஒட்டுமொத்த பெண்ணினத்தின், கண்ணியத்திற்கும் பாதுகாப்பிற்கும், தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் பணியிடப் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக மாறியிருக்கிறது.

பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் மீது விசாரணை நடத்த, கூடுதல் டி.ஜி.பி. திருமதி சீமா அகர்வால் தலைமையில் ஒரு `விசாகா’ கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியே மிரட்டப்பட்டு, ``நாங்கள் புகாரை விசாரிக்க மாட்டோம். இதை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கட்டும்” என்று அறிக்கை கொடுக்குமாறு அழுத்தம் தரப்பட்டது. பிறகு புகார் கொடுத்த பெண் போலீஸ் எஸ்.பி. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிலிருந்தே தூக்கியடிக்கப்பட்டார். புகாருக்குள்ளான ஐ.ஜி. உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று `விசாகா கமிட்டி’ வழிகாட்டுதல் இருந்தும், அவர் அங்கேயே இருப்பதுதான், தன்மீதுள்ள ஊழல் வழக்குகளில் சாதகமான அறிக்கையைப் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று, இன்று வரை மாற்றப்படவில்லை.

இதன்மூலம், முதலமைச்சர் காவல்துறையில் உள்ள பெண்களுக்கு விடுக்கும் செய்தி என்ன? இனி மேல் பெண் போலீஸார் பாலியல் புகார் கொடுத்தால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத அநீதியை இழைத்து, அதற்கு மேலும் அந்தப் பெண் அதிகாரி பழி வாங்கப்படுவார் என்பது தானா?

குட்கா ஊழலில் இருந்து தப்பிக்க தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரு டி.கே.ராஜேந்திரனும், தன் மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும், சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணி அமைத்துக் கொண்டு, ஐ.ஜி. முருகனுக்கு சட்டத்திற்குப் புறம்பான பாதுகாப்பு வழங்கித் தப்பிக்க வைக்கும் அவலச் செயலால், விசாகா கமிட்டி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அப்பட்டமாக மீறி நீதிமன்ற அவமதிப்புக்கே உள்ளாகியிருக்கிறார்கள்.

புகாருக்குள்ளான ஐ.ஜி.க்குப் பரிசு அளிப்பது போல், முதலமைச்சர் மீதான ஊழல் வழக்கு, துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, அமைச்சர் திரு விஜயபாஸ்கரின் 20 கோடி லஞ்ச வழக்கு, அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியின் கம்பெனிகள் கரெப்ஷன் வழக்கு ஆகியவற்றை விசாரிக்கும் பொறுப்பினை இந்த ஐ.ஜி.யிடம் கொடுத்து, பாலியல் புகாரிலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம்; எங்களை ஊழல் புகார்களில் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று, ஒருவருக்கொருவர் சரணாகதி ஒப்பந்தம் போட்டு, அந்த ஐ.ஜிக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சல்யூட் அடித்து நிற்பது, அமைச்சரவைக்கே என்றும் மாறாத அவமானம் என்பதுடன், தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காக 13 அம்சத் திட்டம் ஒன்றை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் இப்போது திரு எடப்பாடி பழனிசாமி சேர்த்திருக்கும் 14-வது அம்சம், பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஐ.ஜி. மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்பதுதானோ என்று சந்தேகப்படும் அளவிற்கு, ஒரு பெண் எஸ்.பி.யின் புகாரையே கிடப்பில் போட்டு ஐ.ஜி.யைப் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்தப் புகார் தொடர்பான விசாரணையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியும், டி.ஜி.பி.யும் கைகோர்த்து தடுத்து வருவதும், இந்தப் புகாரின் மீது சி.பி.சி.ஐ.டி.யில் வழக்குப் பதிவு செய்த பிறகும், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பதும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது கிரிமினல் குற்றம் என்பதையும், உச்ச நீதிமன்றத்தின் விசாகா கமிட்டி தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பதையும் ஏனோ முதலமைச்சரும், டி.ஜி.பி.யும் உணரவில்லை.

குட்கா வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டரைத் தூண்டிவிட்டது போல், இப்போது பாலியல் புகார் வழக்கில் நீதிமன்றத்திற்குச் சென்று தடைபெற ஒரு ஐ.ஜி.யைத் தூண்டிவிட்டு தமிழக காவல்துறையில் உள்ள பெண்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் மோசமான விளைவுகளைச் சந்தித்தே தீர வேண்டிய கட்டாயம் நிச்சயமாக ஏற்படும்.

ஆகவே, பெண் போலீஸ் அதிகாரி கொடுத்துள்ள பாலியல் புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி. திரு முருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கிருந்து மாற்றப்பட வேண்டும் என்றும், சி.பி.சி.ஐ.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் ஐ.ஜி. கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஐ.ஜி. கைது செய்வதைத் தடுத்துக் கொண்டிருக்கும் அனைவர் மீதும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த கிரிமினல் குற்றத்திற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், காவல்துறையில் உள்ள பெண்களுக்கு தங்களின் பாதுகாப்பின் மீது ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல் - மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்ணினத்தின் பாதுகாப்பையும் உதாசீனப்படுத்துவோம் என்ற ஆணவ மனப்பான்மையுடன் திரு எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு செயல்படுவதாகத்தான் அர்த்தமாகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...