எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மறுப்பு ஏன்? - ஸ்டாலின் விளக்கம்!

செப்டம்பர் 30, 2018 442

சென்னை (30 செப் 2018): எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய பெயரை இடம்பெறச் செய்திருக்கும் அரசியல் பண்பாட்டை மதிக்கிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்திருக்கிறார். தலைவர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்தும் மு.தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில், அவருடையை அருமை பெருமைகளைப் பரப்புவதை விட; எதிர்க்கட்சியான தி.மு.க.வையும், குறிப்பாக எம்.ஜி.ஆருடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டி மகிழ்ந்திருந்த கருணாநிதியையும், அவரது குடும்பத்தாரையும், கருணாநிதி பெரிதும் நெருக்கமாக நேசித்த தி.மு.க. தொண்டர்களையும் கடுமையாக விமர்சிப்பது ஒன்றையே முதல்-அமைச்சரில் தொடங்கி, துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் முதன்மை இலக்காகக் கொண்டிருந்ததை, தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

முதல்-அமைச்சர் உள்ளிட்டோரின் அந்த நாகரிகக் குறைவான அணுகுமுறையை மக்களவை துணை சபாநாயகருக்கு நினைவூட்டிட விரும்புகிறேன்.

நிறைவு விழா என்பது, இன்றைய ஆட்சியாளர்களின் மிச்சமிருக்கும் அரசியல் பயணத்திற்காக, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் மக்கள் வரிப்பணத்தில் அரசு செலவில் ஆடம்பரமான முறையில் பல நூறு விளம்பர பேனர்களை பொதுப்போக்குவரத்துக்கு இடையூறாக பாதையெல்லாம் வைத்து நடத்தப்படும் விழா என்பதால், அதன் பின்னணியையும் உள்நோக்கத்தையும் புரிந்துகொண்டு, நான் அதில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், லாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தும் விழாக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...