திடீர் நெஞ்சுவலி - கருணாஸ் மருத்துவ மனையில் அனுமதி!

அக்டோபர் 03, 2018 589

சென்னை (03 அக் 2018): நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரி பற்றி தவறாக பேசியது, ஐபிஎல் போட்டிக்கு எதிராக அனுமதியின்றி போராடியது உள்ளிட்ட 2 வழக்குகளில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

2 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், மற்றொரு வழக்கில் கருணாஸை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட்டபோது மரியாதை செலுத்த சென்ற கருணாஸுக்கும் , மற்றொரு அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக கருணாஸ் உட்பட 32 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கில் கருணாஸை கைது செய்வதற்காக புளியங்குடி டிஎஸ்பி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடி வந்துள்ளனர். கருணாஸ் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பி சென்றுள்ளனர்.

இதற்கிடையே உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாஸ் எம்எல்ஏ அனுமதிக்கப்பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...