தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

அக்டோபர் 04, 2018 843

சென்னை (04 அக் 2018): தமிழகத்திற்கு வரும் 7 ஆம் தேதி ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 தினங்களில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7-ம் தேதி முதல் அதி கனமழை முதல் மிக அதி கனமழை இருக்கும் என்றும், வரும் 5-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அது வலுவடைந்து மண்டலமாக மாறி புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், கேரளாவில் 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

7-ம் தேதி 25 செ.மீ மேல் அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீட்புப் பணிகளுக்கு அதிக அளவில் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், கடலோரப்பகுதிகளில் 60 முதல் 70 பேரைக் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு இருக்கவேண்டு என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் இல்லா பிற மாவட்டங்களில் 45 முதல் 50 நபர்கள் வரை உள்ள குழுவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் ஈரோடு, ஊட்டி, கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டுமென அம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய பேரிடர் மேலாண்மை குழுவின் உதவியை கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார் அப்போது, "இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. பதிவான விவரங்கள் அடிப்படையில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஆகிய இடங்களில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் மூன்று தினங்களை பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 5-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதனைத் தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விடக்கூடும். இது புயலாக மாறி ஓமன் கடற்கரையை நோக்கி நகரக் கூடும். எனவே மீனவர்கள் குமரி கடல் பகுதி தெற்கு கேரளா லட்சத் தீவுகள் தென் கிழக்கு பகுதிகளுக்கு அக்டோபர் 5 முதல் 8 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் இருக்கின்ற மீனவர்கள் அக்டோபர் 5ம் தேதிக்குள் கரைக்குத் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யும்." என்று கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...