குடிநீர் என நினைத்து ஆசிட்டை குடித்த சிறுமி!

அக்டோபர் 11, 2018 439

விருதுநகர் (11 அக் 2018): விருதுநகர் அருகே , குடிநீர் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்த 4 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மனைவி சுகந்தி, கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது கர்ப்பகால பரிசோதனைக்காக, அருகே உள்ள கன்னிச்சேரி அரசு ஆரம்ப சுகாதர மையத்திற்கு சென்றார். அப்போது தன்னுடன் தனது மகள் கிரிஷ்மாவையும் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனை முடிந்த பிறகு அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது சிறுமி கிரிஷ்மாவும் உணவு அருந்தியுள்ளார். அதன்பின்னர் சிறுமி அங்குள்ள தண்ணீர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை, குடிநீர் என்று நினைத்து குடித்துள்ளார். இதை அடுத்து குழந்தை கிரிஷ்மா ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் சிறுமியை விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் - வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...