சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரட்டை வேடம் - கி.வீரமணி!

அக்டோபர் 17, 2018 582

சென்னை (17 அக் 2018): சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கும் போட்டுவிட்டு தற்போது போராட்டம் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் தான் என்று தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பா பகுதியில் ஏராளமான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தினர். இதனை சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. பின்னர் வன்முறையில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே ஆர்.எஸ்.எஸ்.தான்; அதற்கு மாறாக இப்பொழுது போராட்டம் நடத்துவதும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அய்யப்பன் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி, கேரளாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் அன்றாடம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து கேரள அமைச்சர் தெரிவித்துள்ள தகவல் முக்கியமானது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? என்று கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சொசைட்டி சர்வீசு உள்ளிட்ட அமைப்புகள் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:

‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இப்போது அவர்களே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராடுகிறார்கள். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அரசியல் ஆதாயத்துக்காக மக்களைக் குழப்புகின்றன.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் தீர்ப்பு வரும்வரை அனைவரும் அமைதி காக்கவேண்டும்.’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநில அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு எந்தவித மறுப்பும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வெளிவரவில்லையே, ஏன்?

ஒவ்வொரு கோவிலுக்கென்று ஒவ்வொரு சம்பிரதாயம் உண்டு. அதனை மீற அனுமதிக்க முடியாது என்று கூறி, கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு எதிராக பக்திப் போதையில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாக பெண்களை ஒன்று திரட்டி நாள்தோறும் போராட்டங்களை நடத்துபவர்களும் இதே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள்தான்.

‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி’’ என்று ஆரியத்தைப்பற்றி அண்ணா ‘ஆரிய மாயை’யில் எழுதினாரே, அது எந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்பதைப் புரிந்துகொள்வீர்!


பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதில் பெண்கள் வீதிக்கு வந்து போராடவும் முன்வரவேண்டும்.

இது வெறும் மதப் பிரச்சினை மட்டுமல்ல; தேர்தல் - அரசியல் இதற்குள்ளிருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துவோம்!

2019 இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மய்யப்படுத்தி இதனைக் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. என்பதும் முக்கியமாகும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...