இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பம்!

நவம்பர் 01, 2018 2730

புதுக்கோட்டை (01 நவ 2018): காணாமல் போன இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 19 வயதான இவர், தனது ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி, கஸ்துாரி திடீரென காணாமல் போனார். கஸ்துாரியின் உறவினர்கள், பெண்ணைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணைத் தேடி வந்தனர். இதற்கிடையே, கஸ்துாரி பணியாற்றிய பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் ஒரு இளைஞரோடு சென்றதாகத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பெயர் நாகராஜ் எனத் தெரியவந்தது. சென்னையில் இருந்த அவரை போலீசார் ஆலங்குடிக்கு வரவழைத்து நடத்திய விசாரணையில், பகீர் தகவல்கள் அம்பலமாகின.

நாகராஜ் அளித்த தகவலின்படி, புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றுப் பகுதியில், கஸ்துாரியின் சடலம் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஆலங்குடி அருகே மழையூர் அதிரான்விடுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். சிறியரக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். நாகராஜும் கஸ்துாரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆலங்குடி அருகில் உள்ள நம்பம்பட்டி சாலை ஆரஸ்பதி காட்டில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான், ஆலங்குடியில் உள்ள மருந்தகத்தில் கஸ்துாரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.

அந்த மருந்தகம் எதிரில், சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கான வாகன நிறுத்தம் உள்ளது. நாகராஜ் தனது வாகனத்தை எப்போதும் அந்த நிறுத்தத்தில்தான் நிறுத்தி வைப்பார். இந்நிலையில், சம்பவம் நடந்த 29-ம் தேதி அன்று, மருந்தகத்தில் சொல்லி விட்டு தனது காதலன் நாகராஜுடன் கஸ்துாரி வெளியே சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் இருவரும் வழக்கம்போல், தைலமரக்காட்டில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இருவரும் உடலுறவு கொண்டபோது, கஸ்துாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நாகராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார். திடீரென கஸ்துாரி உயிரிழந்ததால் செய்வதறியாமல் திகைத்த நாகராஜ். இருட்டும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்.

அதன்பின்னர் ஒரு சாக்குப் பையில் கஸ்துாரியின் சடலத்தைக் கட்டி, தனது சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். அதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டியுள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் சடலத்தை வீசி விட்டு திரும்பியுள்ளார்.

இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க வாகனத்தை திருச்சியில் விட்டு விட்டு நாகராஜ் சென்னைக்கு சென்றுள்ளார். நாகராஜின் உறவினர்கள் மூலம் அவரை ஆலங்குடி போலீசார் ஊருக்கு வரவழைத்துள்ளனர். ஆலங்குடி காவல்நிலையத்தில் நடந்த விசாரணையின் போது இந்த தகவல்களை நாகராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால் கஸ்துாரியின் உறவினர்கள், நாகராஜ் மட்டுமின்றி வேறு சிலரும் சேர்ந்து தங்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளனர். நாகராஜையும் அவரது பின்னணியில் இருப்பவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பனங்குளம், ஆவணம், பெரியாளூர், கொத்தமங்கலம், வடகாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கஸ்துாரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டிப்போட்டு, டயர்களை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிரடிப் படை போலீசார் பல இடங்களில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.

போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், உடற்கூறாய்வின் போது வீடியோ பதிவு செய்வதாகவும் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து, போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

விசாரணைக்குப்பிறகு கஸ்தூரியின் காதலர் நாகராஜை கைது செய்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதுடன், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...