சர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்!

நவம்பர் 07, 2018 733

வேலூர் (07 நவ 2018): சர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஈராளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரின் மகன் மணிகண்டன் (28), சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மணிகண்டன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இன்று வெளியான ‘சர்கார்’ படத்துக்கு விஜய் ரசிகர்கள் சிலர், மணிகண்டனின் வீட்டின் அருகே பேனர் வைத்திருந்தனர்.

குடிபோதையில் இருந்த மணிகண்டன், ‘சர்கார்’ பேனரைக் கிழித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மணிகண்டனைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உறவினர்கள் மணிகண்டனை மீட்டு அவரது சித்தப்பா வீட்டுக்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டினர்.

‘தன்னைத் தாக்கியவர்களை திரும்பத் தாக்க வேண்டும். கதவைத் திறந்துவிடுங்கள்’ என்று மணிகண்டன் கூச்சலிட்டார். உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை. விஜய் ரசிகர்கள் மேலும் சிலர் அப்பகுதியில் திரண்டனர். சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கினார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். விஜய் ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். காவேரிப்பாக்கம் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக்கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...