தீபாவளியன்று மாணவி கூட்டு வன்புணர்வு செய்து படு கொலை - ஒப்புக்கொண்ட வாலிபர்!

நவம்பர் 13, 2018 729

தருமபுரி (13 நவ 2018): தருமபுரி அருகே தீபாவளி அன்று மாணவியை சக நண்பருடன் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்ததை வாலிபர் ஒப்புக் கொண்டார்.

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சதீஷ் (வயது 22) நேற்று முன்தினம் ஏற்காட்டில் கைது செய்யப்பட்டார். அரூர் கொண்டுவரப்பட்ட அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை தருமபுரி மகளிர் விரைவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு இன்று அதிகாலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான வாலிபர் சதீஷ் மாணவியை கற்பழித்தது உண்மைதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறிய தகவல்கள் வருமாறு:-

எனக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவேன். தீபாவளி சமயத்தில் ஊருக்கு வந்தபோது அவரை சந்தித்து தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரமேசும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ரமேஷ் (22) என்ற வாலிபர் சேலம் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். 19-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதேபோல சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சதீசையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...