ஊருக்கே உணவளித்த மாவட்டம் உணவுக்காக கையேந்தும் வேதனை!

நவம்பர் 24, 2018 587

தஞ்சாவூர் (24 நவ 2018): ஊருக்கே உணவளித்த தஞ்சை மாவட்ட மக்கள் இன்று உணவுக்காக கையேந்து நிலை பார்ப்பவர்களை கண்கலங்க செய்கிறது.

கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் மிக முக்கியமாது தஞ்சை மாவட்டம். நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் இம்மாவட்டத்தில் காவல்துறை பாதுகாப்புடன் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவது வேதனையின் உச்சம். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு, அண்ணாநகர் பகுதியில், வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக 1000-கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

கஜா புயலால் குடிசைகள் தொடங்கி அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்கள் இன்று ஒருவேளை உணவுக்கும் கையேந்தி காத்து நிற்கின்றனர்

குழந்தை குட்டிகளுடன் தங்குவதற்குக் கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குடியிருப்புகள் முழுவதும் நீரில் மிதக்கும் சூழலில், அரசு அதிகாரிகள் வந்து தங்களுக்கு வாழ்வு தரமாட்டார்களா என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.

அண்ணா நகர் வாசிகள். திருவாரூர் மாவட்டம் குன்னியூர் ஊராட்சியில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. பால், குடிநீர், மெழுகுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட அதிக விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினரும் வந்து பார்த்து விட்டு செல்வதாகவும் எந்தவித மீட்சியும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் வேதனையுடன் தஞ்சை மக்கள் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டாலும், உணவு மற்றும் தங்குவதற்காவது ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட இம்மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...