தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

டிசம்பர் 02, 2018 506

சென்னை (02 டிச 2018): தமிழக வட கடலோர மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் பரவி உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் வட மாவட்டங்களில் தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுகிறது.

இது வருகிற 3-ம் தேதி தென்மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை வரை பரவும். இதன் காரணமாக வருகிற 4-ம் தேதி முதல் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.4 மற்றும் 5-ம் தேதிகளுக்கு மட்டுமே வடதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11 செ.மீ. அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...