பரங்கிப்பேட்டை அருகே பரிதாபம்!

டிசம்பர் 05, 2018

கடலூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சக்கரபள்ளி மண்டபத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (30) - கோமதி (26) தம்பதியர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கோமதி மீண்டும் கர்ப்பமானார்.

கடந்த 2- ந்தேதி நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, கோமதிக்கு குழந்தை இறந்து பிறந்தது. பின்னர், குழந்தையை, வீட்டின் அருகே உறவினர்கள் புதைத்தனர்.

மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் நடந்ததால் கோமதிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்தது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட கோமதியை, சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு முதல் உதவி சிகிச்சை மட்டும் அளிக்கபட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இறந்த குழந்தையை வீட்டிலேயே புதைத்துள்ளனர். அதையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவர்கள் அல்லது செவிலியர்களின் துணையின்றியோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!