விவசாயத்தை காப்பாற்றிய நெல் ஜெயராமன் மரணம்!

டிசம்பர் 06, 2018 587

சென்னை (06 டிச 2018): நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர். அழிவின் விழிம்புக்கு சென்ற பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து மீட்ட பெருமைக்குரியவர்!

இதற்காகவே ஆண்டு தோறும் நெல் திருவிழா நடத்தி, 169 ரகங்களை சேர்ந்த பாரம்பரிய நெல் விதைகளை இவர் மீட்டார். சாதாரண கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பாரம்பரிய விவசாயத்தை பாதுகாப்பதில் சாதனை படைத்தவர் இவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சிஷ்யர்களில் ஒருவர்!

தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான நெல் ஜெயராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு காலமானார்.

நெல் ஜெயராமன் சிகிச்சைக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் நிதியுதவி செய்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஏற்கனவே அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார். பல்வேறு தரப்பினர் முயற்சி எடுத்தும் அவரை காப்பாற்ற முடியாதது சோகம்!

முன்னதாக நேற்று மாலை முதல் நெல் ஜெயராமன் உடல்நிலை குறித்து மாறுபட்ட செய்திகள் வெளிவந்தபடி இருந்தன. இன்று காலை அவரது மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நெல் ஜெயராமன் உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகர் 2வது தெருவில் நெல் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டது. காலை 11 மணி வரை பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்தலாம். பின்னர் சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச்சடங்கு சொந்த ஊரான கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...