இந்தியாவில் முதல் முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்!

டிசம்பர் 08, 2018 638

சென்னை (08 டிச 2018): உள்ளேன் ஐயா விடைபெறுகிறது. அரசு பள்ளிகளில் முக அடையாளம் மூலம் வருகை பதிவு சென்னையில் சோதனை முறையில் செங்கோட்டையன் தொடங்கிவைக்கிறார்.

அரசு பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேட்டில் உள்ள பெயர்களை ஆசிரியர்கள் வாசிக்க, தமிழ் வகுப்பு என்றால் ‘உள்ளேன் ஐயா’ அல்லது ‘உள்ளேன் அம்மா’ என்றோ, ஆங்கில வகுப்பு என்றால் ‘பிரசன்ட் சார்’ அல்லது ‘பிரசன்ட் மேடம்’ என்றோ மாணவர்கள் தங்கள் வருகையை உறுதிசெய்கின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழக கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. ‘அதிநவீன வருகை பதிவு திட்டம்’ (ஸ்மார்ட் அட்டென்டன்ஸ் ஸ்கீம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தால், காலங்காலமாக இருக்கும் வருகை பதிவு முறை தமிழகத்தில் இனி இல்லாமல்போகும்.

முக அடையாளம் மூலம் வருகை பதிவு செய்யும் முறை செல்போன் செயலி மூலம் இயங்குகிறது. ஒருமுறை மாணவர்களின் புகைப்படம் தனியாக அதில் படம் பிடித்து, பெயர் விவரத்துடன் சேமித்துவைக்கப்படும். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள அனைத்து மாணவர்களின் படங்களும் அந்த செயலியில் சேமிக்கப்படும். பின்னர் ஆசிரியர் தான் வைத்திருக்கும் செல்போனில் மாணவர்களை நோக்கி குழுவாக படம் பிடித்தால் வகுப்புக்கு வந்திருக்கும் மற்றும் வராத மாணவர்களின் விவரங்களை அது ஒரு நொடியில் காண்பித்துவிடும்.

தற்போதுள்ள வருகை பதிவு முறையில் ஆசிரியருக்கு 10 முதல் 15 நிமிடம் வரை ஆகிறது. ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நேரம் மிச்சமாகும். மாணவர்களின் புகைப்படம் தெளிவாக பதிவாகவில்லை என்றால் ‘பீப்’ என்ற சத்தம் ஒலிக்கும். பின்னர் அந்த மாணவர்களை மீண்டும் படம்பிடித்து வருகையை பதிவு செய்துகொள்ளலாம்.

மாணவர்களின் வருகை பற்றிய விவரங்கள் உடனடியாக தலைமை ஆசிரியை, மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரிகளுக்கு ஒரு நொடிக்குள் சென்றுவிடும். இந்த திட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வராமலேயே, மாறாட்டம் செய்து வந்திருப்பதாக இனி ஏமாற்ற முடியாது. பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு, ‘உங்கள் பிள்ளை பள்ளிக்கு வரவில்லை’ என்ற விவரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பவும் முடியும். இந்த தகவல்களை ‘சர்வரில்’ சேமித்தும் வைக்கலாம்.

இந்த நவீன தொழில்நுட்ப முறை சென்னை அசோக்நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளியின் 8-ம் வகுப்பு ‘ஏ’ பிரிவு மாணவிகள் 54 பேரின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை மறுதினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைக்கிறார். 10 நாட்கள் முக அடையாளம் மூலம் வருகை பதிவேடு செய்யும் முறை பரிசோதித்து பார்க்கப்படுகிறது. பின்னர் மற்ற பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் ஐ.சி.இ.டி. நிறுவனர் ஸ்ரீதர் நர்லா மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் ஆலோசகர் தமிழ்மாறன் ஆகியோர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:

முக அடையாளம் மூலம் நவீன வருகைப்பதிவு திட்டம் சோதனை முறையில் கொண்டுவந்திருக்கிறோம். வகுப்பு ஆசிரியர் செல்போன் மூலம் வகுப்பறையில் இருக்கும் மாணவ-மாணவிகளை படம் எடுத்தால் போதும், வகுப்புக்கு வந்தவர்கள் விவரத்தை அது சுட்டிக்காட்டிவிடும்.

தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்துவைக்கலாம். 95 சதவீதம் துல்லியமாக வருகை பதிவை இந்த தொழில்நுட்பம் தெரிவிக்கும். சென்னையில் முதல்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்படும் இத்திட்டம் தொடர்ந்து அரசின் உத்தரவுக்கு பின்னர் இதர நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...