கனிமொழிக்கு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

டிசம்பர் 09, 2018 493

புதுடெல்லி (09 டிச 2018): பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

இது பற்றி பேசிய லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தர்தா, “லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மக்களவை பெண் நாடாளுமன்ற உறுப்பினராகக் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விருதுகளை வழங்க உள்ளார். கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி நாடாளுமன்றத்தில் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருகிறது. இவர்களுக்கு விருது அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...