ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது - நீதிமன்றம் தடை!

டிசம்பர் 22, 2018 719

மதுரை (22 டிச 2018): ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.

மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதேபோல், தீர்ப்பு வெளியாவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பே, வேதாந்தா நிறுவனத்தில், உத்தரவு நகல் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய மார்ச் 14 வரை அவகாசம் உள்ள நிலையில், அதுபற்றி முன்கூட்டியே அடுத்த மாதம் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...