தமிழகம் முழுவதும் புத்தாண்டு பைக் ரைடுக்கு தடை!

டிசம்பர் 22, 2018 474

சென்னை (22 டிச 2018): தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு அன்று நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில், 'ஜாலி ரைடு' என்று பெயரிடப்பட்ட வாகன சவாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், ஜாலி ரைடுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று அண்ணாநகரில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவர் தன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும்,

அதில், கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, செய்த வேலையும் பாதிக்கப்பட்டு குடும்ப நிலையே தலைகீழாக மாறியதாக குறிப்பிட்டார். இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, புத்தாண்டில் மதுரையில் ஜாலி ரைடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது. வாகனங்களில் அதிவேகத்தில் செல்பவர்களை தடுத்த நிறுத்தவும், தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, ஆங்கில புத்தாண்டின் போது நள்ளிரவில் 'ஜாலி ரைடு' செல்ல தமிழகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றும், வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் விதமாக இதுதொடர்பாக, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், எஸ்.பி.-க்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...