ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் இணைப்பு!

டிசம்பர் 24, 2018 422

சென்னை (24 டிச 2018): அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா. அவரும், அ.தி.மு.கவில் உறுப்பினராக இருந்துவருகிறது. அவர் மீது ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தனர். இதற்கிடையில், கடந்த சில வருடங்களுக்கு தேனி மாவட்டம் கைலாசநாதர்பட்டியிலுள்ள கோயில் பூசாரி நாகமுத்துவின் தற்கொலையில் ஓ.ராஜாவின் பெயர்தான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், போட்டியிடுவதற்கு ஓ.ராஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனையடுத்து, அந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தங்கராஜன், கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், இருவருக்கும் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும், துணைத் தலைவராக தங்கராஜனும் பதவியேற்றனர். கடந்த 19-ம் தேதி கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா பதவியேற்ற, சில மணி நேரங்களில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில், இன்று ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளக்கோரி கேட்டுக்கொண்டதால் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...