கும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கொடூர கொலை!

ஜனவரி 06, 2019 556

கும்பகோணம் (05 ஜன 2019): கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மும்தசர் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரின் மகன் மும்தசர் இவர் மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவரின் தந்தை துபாயில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் வசித்து வந்த மும்தசர் நேற்று மாலை 6.30 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தமது அக்கா வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

அக்கா வீட்டிலிருந்து தன் நண்பர் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசரை கடத்தியுள்ளோம். கோயம்புத்தூர் அழைத்துச் செல்கிறோம். ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மும்தாஜ் அவரது சகோதரரும் மும்தசரின் தாய் மாமாவுமான .ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் நசீர் முகம்மதுக்கு தகவல் கொடுத்தார். அவர் திருவிடைமருதூர் போலீசில் புகார் அளிதார்.

இதற்கிடையே இன்று காலை திருப்புவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் மும்தசர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மும்தசர் உடலைப் பார்த்து கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது. மாணவர் மும்தசர் உடல் பிரேத பரிசோதனைக்காகக் கும்பகோணம் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...