ஜெ. தீபாவின் கட்சி அதிமுகவுடன் இணைப்பு!

ஜனவரி 07, 2019 320

சென்னை (07 ஜன 2019): அதிமுகவுடன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை இணைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. தீபா திடீரென அறிவித்துள்ளார்.

அப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அதில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா அணி ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜெ.தீபா, அதிமுக மாபெரும் இயக்கம் எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கட்சியை வளர்த்ததாகவும் குறிப்பிட்டார். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா தான் காரணம் என குற்றம்சாட்டிய அவர், தமிழக மக்கள் அவர்களை விரட்டி ஒதுக்கி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் முழுமையாக உண்மையை வெளியே கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.

இதுமட்டுமல்லாமல், தொண்டர்களின் ஆதரவுடன் ஒரு சிறிய இயக்கத்தை நடத்தி வந்ததாகவும், இரண்டு ஆண்டுகளாக ஆதரவு தந்ததற்கு நன்றி எனவும் ஜெ. தீபா தெரிவித்தார். தினகரனை தீய சக்தி என விமர்சித்த அவர், அதிமுக தான் தங்களது நிழல் என்றும் நூற்றாண்டுகாலம் கட்சி இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையே, அதிமுகவுடன் பேரவையை இணைக்க மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுத்ததாக கூறி, சில தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...