சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாதிரியார் உள்ளிட்ட கும்பல்!

ஜனவரி 08, 2019 435

கடலூர் (08 ஜன 2019): பள்ளிச் சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலுக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விவசாயி மகள் ராணி. அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கூத்தப்பன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவரின் மகள் செல்வி. இவரும் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். 2014ம் ஆண்டு 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் தேடிய மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர். மாணவிகள் வைத்திருந்த செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டபோது திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலையில் இருப்பதாகவும் கம்பெனியை விட்டு வெளியே அனுப்பாததால் கம்பெனி பெயர் தெரியவில்லை எனவும் அந்தக் கம்பெனி திருப்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது எனவும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் திருப்பூரில் முகாமிட்டு காணாமல் போன மாணவிகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்களது செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து பார்த்தபோது மாணவிகள் வடலூரில் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் அதிகமாக போனில் பேசியது வடலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது.

உடனே போலீசார் சதீஷ்குமாரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவனது போன் மூலம் மாணவிகளிடம் பேச வைத்த போலீசார் அவர்களை திட்டக்குடி வரவழைத்தனர். கடலூர் ஏடிஎஸ்பி முரளி தலைமையில் டிஎஸ்பி கருணாநிதி, இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் அழகுராணி, கடலூர் அமுதா, சிதம்பரம் மீனா, பண்ருட்டி தீபா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். அதில்தான் ஒரு கும்பல் இருவரையும் பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் தள்ளிய அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இரண்டு மாணவிகளும் ஞாயிற்றுக்கிழமை தோறும் திட்டக்குடியில் உள்ள தேவாலயத்துக்கு செல்வது வழக்கம். அப்போது பாதிரியார் அருள்தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர், ஆசை வார்த்தை கூறி இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையறிந்த திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி, மாணவிகளை மிரட்டி அதே பகுதியை சேர்ந்த சிலருக்கு விருந்தாக்கி உள்ளார். பின்னர் இரு மாணவிகளையும் விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் 5 ஆயிரம் ரூபாய்க்கு லட்சுமி விற்றுள்ளார். அவர்களை 2 நாள் வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாரிடம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதன்பிறகு புதுச்சேரி, வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் மாணவிகளை தங்க வைத்து பலருக்கும் சதீஷ்குமார் விருந்தாக்கி உள்ளார். இவ்வாறு களிமண் பொம்மைகளைப் போல இரண்டு சிறுமிகளும் பலருடைய கைகளுக்கும் மாறி மாறி சென்று சிதைக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிரியார் அருள்தாஸ், வடலூர் சதீஷ்குமார், திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்கிற தனலட்சுமி, விருத்தாசலம் கலா, ஜெமினா ஆகிய 5 பேரையும் முதலில் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெபினா, தமிழ்செல்வி, சர்மிளா, கவிதா, மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா, கோலியனூர் பாத்திமா, இவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, அமுதா, மற்றொரு அன்பு, பாலு என்ற பாலசுப்பிரமணியன், சதீஷ் மற்றும் ஓட்டுநர் ஸ்ரீதர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் போக திட்டக்குடியை சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன், விக்னேஷ், ஆனந்தராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணைக் காலத்தில் சிலர் இறந்து விட்டனர். இந்த வழக்கை 2017 முதல் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். அதில்தான் கடலூர் மகளிர் நீதிமன்றம் 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு அவர்களுக்கான தண்டனை விவரத்தையும் அறிவித்துள்ளது.


டவர் ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஶ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கியுள்ளது நீதிமன்றம். இதேபோல் அன்பு என்கிற செல்வராஜ், மதபோதகர் அருள்தாஸ் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனையும் மற்ற ஆறு பேருக்கும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது கடலூர் மகளிர் நீதிமன்றம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...