மன்னிப்புக் கடிதம் தர முடியாது - அதிமுக எம்.பிக்கள் திட்டவட்டம்!

ஜனவரி 08, 2019 458

புதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, சுற்றுச் சூழல் ஆய்வு நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லி., குளிர்கால கூட்டத் தொடரில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து எந்தவொரு பதிலும் தர, அரசு தரப்பு தயாராக இல்லாத நிலையில், அதிருப்தியின் உச்சகட்டமாக, லோக்சபாவில், அ.தி.மு.க., -எம்.பி.,க்கள் சிலர், ஆவேசத்துடன் அமளியில் இறங்கினர்.

சில, எம்.பி.,க்கள் சபைக்குள், காகிதங்களை கிழித்து, வீசியெறிந்து ரகளையில் இறங்கியதும், மேஜை மீது ஏறி கூச்சலிட முயன்றதையும் அடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோபமடைந்தார். அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், 31 பேரை, சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்தார். இந்த நடவடிக்கையை ஏற்க முடியாதென்றும், அவர்களை மன்னித்து, சபைக்குள் வர அனுமதிக்கும்படியும், துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில், நேற்று லோக்சபா கூடியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், வேணுகோபால், கே.என்.ராமச்சந்திரன், கோபால் ஆகியோர், மேகதாது பிரச்னைக்காக குரல் கொடுத்தபடி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, இவர்கள் மூன்று பேரையும், சபாநாயகர், 'சஸ்பெண்ட்' செய்தார்.

பின், சபையில், தம்பிதுரை பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கி தவறு செய்தது, மத்திய அரசு தான். தமிழக, எம்.பி.,க்கள், தங்கள் உரிமைக்காகவே குரல் எழுப்பினர். மத்திய அரசு உரிய முறையில் தலையிட்டு இருந்தால், இவர்கள் அமளியில் இறங்கியிருக்கவே மாட்டார்கள். தமிழக நலன் சார்ந்த உரிமைக்காக குரல் கொடுக்கும் இவர்களுக்கு, வேறெந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் சபைக்குள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இது பற்றி, உரிய முறையில் பேசி தீர்க்கலாம்,'' எனக் கூறி, அலுவல்களை தொடர்ந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...