ஆஹா ஆச்சர்யம் - மத்திய அரசை விளாசிய தம்பித்துரை!

ஜனவரி 09, 2019 345

புதுடெல்லி (09 ஜன 2019): உயர் ஜாதியினருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்த விவாதத்தில், பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போட்டிருந்தால் இடஒதுக்கீட்டுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது’’ என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் அல்லது 5 ஹெக்டேருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தில் தம்பிதுரை பங்கேற்றுப் பேசுகையில், சட்டமாகாது என தெரிந்தே உயர் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், 'பிரதமர் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு அனைவரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போட்டிருந்தால் இடஒதுக்கீட்டுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது’ என்று தெரிவித்தார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் வருணாசிரம தர்மத்தால் சூத்திரர்களாக நீடிப்பதாகவும் அவர் ஆவேசமாக கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...