ஹரிணியை கடத்தியதன் பாச பின்னணி!

ஜனவரி 09, 2019 377

சென்னை (09 ஜன 2019): எட்டு வருஷமாக குழந்தை இல்லாததால் ஹரிணியை என் மகளாகவே வளர்த்தேன் என்று மீட்கப் பட்ட ஹரிணியை வைத்திருந்த சங்கீதா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

வெங்கடேசன், காளியம்மன் என்ற நாடோடி இனத் தம்பதி தங்களது இரண்டு வயது குழந்தை ஹரிணியை காஞ்சிபுரம் மானாமதியிலுள்ள அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தொலைத்துவிட்டனர். காணாமல் போன குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அங்கேயே இருந்தனர். காஞ்சிபுரம் காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தது.

அக்குழந்தையின் தாய் ஒன்பது மாத கர்ப்பிணி குழந்தை காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சீரியஸான நிலைக்கு சென்றுதால். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், இந்த செய்தியை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தினார்.தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், சிறுமி ஹரிணி 100 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார். , நேற்று (ஜனவரி 8) திருப்போரூரில் ஹரிணி மீட்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தையை வைத்திருந்த சங்கீதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், "என்னோட சொந்த ஊர் கல்பாக்கம் பக்கத்துல இருக்குற பூந்தண்டலம். மாமியார் வீடு திருப்போரூர்ல இருக்கிறது. மாமியார் வீட்லதான் இருந்தேன். எனக்கு எட்டு வருஷமா குழந்தை இல்லை. நிறைய ஹாஸ்பிட்டல் போய் பரிசோதனை செய்தோம். குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு குறைவா இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். என்னோட குடும்ப நண்பர்களான பிரகாஷ், வீரபாண்டி இவங்க எனக்கு ஒரு குழந்தையை ஏற்பாடு செய்து கொடுப்பதாக சொன்னாங்க. ‘குழந்தையை வளர்க்க முடியாமல் நரிக்குறவர் கஷ்டப்படுவாங்க. அவங்க குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம். கொஞ்சம் பணம் கொடுத்தா அவங்க குழந்தையை கொடுப்பாங்க.’ன்னு சொன்னாங்க. கொஞ்சநாள் கழிச்சு ஹரிணியை கொண்டுவந்து கொடுத்தாங்க. நானும் அவங்களுக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தேன்.

ஹரிணி அம்மா…அம்மான்னுதான் என்னை கூப்பிடுவா. குழந்தைக்குச் சாப்பாடு கொடுத்தால் சமத்தா சாப்பிடுவா. அவளுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். புது ட்ரெஸ், செயின், கொலுசெல்லாம் போட்டு என்னோட குழந்தையாகவே பார்த்துக்கிட்டேன். காது குத்தி கம்மல் போட்டோம். ஹரிணி அம்மா அம்மான்னு என்னை கொஞ்சுவா. கொஞ்ச நேரம் கூட என்னைப் பிரிந்து இருக்க மாட்டா. அவளோட செல்ஃபியெல்லாம் எடுத்துக்கிட்டேன். டிவியெல்லாம் எங்க வீட்டுல இல்லை. ரெண்டு மாசம் கழிச்சுதான் அது கடத்தப்பட்ட ஹரிணின்னு எனக்கு தெரிஞ்சுது. ஆனாலும் குழந்தையை கொடுக்க மனசு இல்லை. இதனால் என்னோட கணவருக்கும் எனக்கும் ஒருகட்டத்தில் சண்டை வந்தது. கொஞ்சநாளுக்கு முன்பு குழந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்தநிலையில அவளைக் கொண்டு போய் கொடுத்துடலாமான்னு கூட யோசிச்சோம். அப்போதுதான் போலீஸ் இருந்து ஹரிணியை அழைச்சிக்கிட்டு போனாங்க. அப்பவும் என்னைப் பார்த்து அம்மான்னு தான் அழத் தொடங்கினாள்” என்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...