நாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சீல்!

ஜனவரி 10, 2019 361

நாகப்பட்டினம் (10 ஜன 2019): நாகை அருகே செயல் பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக் கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில், அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவப் பல்கலைக்கழகம் என்ற பெயரில், போலியான பல்கலைக்கழகம் ஒன்றை செல்வராஜ் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். தொலைதூரக் கல்வி வழங்கும் பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர், நாடு முழுவதும் ஆயுர்வேத சித்தா ஆகிய மருத்துவத் துறைகளின் கீழ் போலிச் சான்றிதழ்கள் அளித்துள்ளார். இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போலி மருத்துவப் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்று முறை மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இது குறித்து தினசரி பத்திரிகை ஒன்றில் விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, குத்தாலத்தில் ஒரு வீட்டில் இந்தப் போலி பல்கலைக்கழகம் நடத்தி வருவது தெரியவந்தது. சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநரக அதிகாரிகள் டி.எஸ்.பி தாமஸ் பிரபாகர் தலைமையில், நாகை இணை இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், போலி பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஏராளமான போலிச் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து போலி பல்கலைக்கழகத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். போலி மருத்துவச் சான்றிதழ்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தெரிவித்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகம் நடத்தி வந்த திருவேள்விக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...