சவூதியில் இறந்த தமிழர் உடல் தமுமுக முயற்சியில் தமிழகம் கொண்டு வரப்பட்டது!

ஜனவரி 16, 2019 490

ரியாத் (16 ஜன 2019): சவுதி அரேபியா ரியாத்தில் இறந்த செபாஸ்டியன் ஆரோக்கியசாமி உடலை ரியாத் தமுமுக எடுத்த முயற்சியால் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா முதல்சேரி கிராமத்தை சேர்ந்த செபாஸ்டியன் ஆரோக்கியசாமி அவர்கள் சவுதி அரேபியா - ரியாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ரியாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த செய்தி அறிந்ததும் அவரது உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்த நிலையில் துபாயில் உள்ள அவரது மைத்துனர் சகோ.ரீஹன் அவர்கள் இதுகுறித்து உதவுமாறு ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளை அணுகினார். அதன் அடிப்படையில் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள், மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்களை தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

இந்த தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்கள் ஆரோக்கியசாமி வேலை செய்த அலுவலகத்தை அணுகி மருத்துவமனையில் இருந்து ஆரோக்கியசாமியின் உடலை வாங்க தேவையான ஆவணங்களை
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஆரோக்கியசாமி வேலை செய்த நிறுவனத்திடமிருந்து போராடி பெற்று, தூதரக ஒத்துழைப்புடன் சுமேசி மருத்துவமனையில் ஒப்படைத்து அவரது உடலைப் பெற்று கொள்ளப்பட்டது.

பின்னர் ஆரோக்கிய சாமியின் உடல் 15/01/2019 செவ்வாய் கிழமை இலங்கை வழியாக திருச்சி விமான நிலையம் சென்றடைந்தது.

திருச்சி மாவட்ட தமுமுக தலைவர் சகோ.ரபீக் அவர்களின் தலைமையில், தஞ்சை மாவட்ட தலைவர் சகோ.ஹாஜா அவர்களின் முயற்சியால் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆரோக்கியசாமியின் உடல் இன்று (16/01/2019) அவரது இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும்இன்றி உரிய நேரத்தில் எனது கணவரின் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள்* என்று அவரது மனைவி கண்ணீருடன் கூறினார். ரியாத் மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கும், திருச்சி மற்றம் தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆரோக்கியசாமியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...