திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஜனவரி 21, 2019 388

சென்னை (21 ஜன 2019): பத்து சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா மத்திய அமைசரவையில் ஒப்புதல் பெற்றது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, இந்த மசோதா கடந்த ஜனவரி 14 ஆம் தேதி குஜராத்தில் அமலுக்கு வந்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டம் அமலுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் இந்த இடஒதுக்கீடு திட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...