போராட்டத்தில் செல்ஃபி எடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட ஆசிரியர்கள்!

ஜனவரி 26, 2019 597

வேலூர் (26 ஜன 2019): வேலூரில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கூட்டம் கூட்டமாக செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ப்ளஸ் ஒன் மாணவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தது. ‘‘மாணவர்களின் நலன் கருதி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், 25-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டுமென’’ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்பவில்லை.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 1500 பேர், 25-ம் தேதி காலை குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் ஆங்காங்கே குழு குழுவாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆம்பூர் பாலசுப்பிரமணி, குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் என்.ஜி.பார்த்திபன் உட்பட தி.மு.க மற்றும் அ.ம.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் போராட்ட களத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்தனர். அவர்களுடனும் சேர்ந்து, சிரித்தபடி பல்வேறு ‘போஸ்’ கொடுத்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக, 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் சிரமப்பட்டு, கலெக்டர் அலுவலக பகுதியை கடந்து சென்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ஆசிரியர்கள், திடீரென சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 1300 பேரை போலீஸார் கைது செய்து, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மாலையில், அவர்களை விடுவித்தனர். மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்த ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் சமரசத்தை ஏற்று உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி பொது உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மீது சத்துவாச்சாரி போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர மகாலிங்கம் புகார் அளித்தார். அதன்பேரில், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சரவணராஜ் (52), மணி (56), அமர்நாத் (44), சுதாகரன் (54), சுரேஷ்குமார் (53), பிரின்ஸ் தேவ ஆசீர்வாதம் (51) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...