மோடிக்கு எதிராக மீண்டும் சமூக வலைதளங்களில் வெடித்த போர்!

ஜனவரி 27, 2019 1007

சென்னை (27 ஜன 2019): பிரதமர் மோடிதமிழகம் வருவதை ஒட்டி ஒரு புறம் பாஜகவினர் உற்சாகத்தில் இருந்த போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் GOBACKMODI ட்ரெண்டாகி வருகிறது.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான இன்று முற்பகல் சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது கருப்புக்கொடி காட்டியும் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தும் பெரியாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அதுபோல இம்முறையும் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வராதது, மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு, ஸ்டெர்லைட் மற்றும் பொருளாதார ரீதியிலான 10 % இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி மோடி வருகையின் போது எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டப்படும் என்று மதிமுக, திவிக, மே 17 மற்றும் பெரியாரிய இயக்கங்கள் அறிவித்துள்ளன.

சென்ற முறை கோபேக் மோடி ட்ரண்ட் ஆனதை அடுத்து இம்முறை முந்திக்கொண்ட தமிழக பாஜகவினர் பிரதமரை வரவேற்கும் விதமாக #MaduraiThanksModi #comecomemodi என்ற ஹாஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பதிவுகள் இட ஆரம்பித்தனர். இது டிரண்ட் ஆகவே மீண்டும் #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்க ஆரம்பித்தனர். இதனால் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் கோபேக் மோடிக்கும் கம்கம்மோடிக்கும் இடையில் பலத்த போட்டி உருவாகியுள்ளது.

ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே #MaduraiThanksModi #comecomemodi ஐ விட #Gobackmodi இந்திய அளவில் டிரண்ட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் மோடி வருகையின் போது எந்த விதமான விரும்பதகாத நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க மதுரை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 5 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...