அதிர்ச்சியை ஏற்படுத்திய கால் டாக்சி டிரைவரின் மரணம்!

ஜனவரி 31, 2019 539

சென்னை (31 ஜன 2019): சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுனர், இறப்பதற்கு முன்பு தன்னுடைய தற்கொலைக்கு சென்னை போலீஸ் தான் காரணம் என்று பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் NTL நிறுவனத்தில் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25ம் தேதி காலை 8 மணியளவில் டிஎல்எஃப் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

வழியில் மற்றொரு ஊழியரை ஏற்றுவதற்காக பாடி சிக்னலில் அருந்து அண்ணா நகர் செல்லும் வழியில் கால் டாக்சியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 போலீசார், அந்த இடத்தில் காரை நிறுத்தக் கூடாது என, காரில் அமர்ந்திருந்த பெண் பயணி முன்னிலையிலேயே ராஜேஷை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ், சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் ஏறியதால் துண்டான மணிகண்டனின் தலையும், உடலும் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், சென்னை காவல்துறையினருக்கு எதிராக ராஜேஷ் அளித்திருந்த மரண வாக்குமூலம் சமூக வலைதளங்களில் இப்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், தாம் தற்கொலை செய்துகொள்வதற்கு போலீசார் உபயோகித்த தகாத வார்த்தைகளே காரணம் என பேசியிருக்கிறார்.

“எங்களைப் போன்ற கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தினம் செத்துப் பிழைத்து தான் வண்டி ஓட்டுகிறோம். என்னை மிகக் கேவலமாக போலீசார் திட்டினர். எனது சாவுக்கு முழுக்க முழுக்க சென்னை போலீஸ் தான் காரணம்” என்று தெள்ளத் தெளிவாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் மரண வாக்குமூலம் குறித்து விசாரணை நடத்த, சென்னை மேற்கு காவல் இணை இணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தரவேண்டும். 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...