வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு - ஆண்களை விட பெண்கள் அதிகம்!

பிப்ரவரி 01, 2019 479

திருச்சி (01 பிப் 2019): வாக்காளர் இறுதிப் பட்டியலில் திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22 லட்சத்து 21 ஆயிரத்து 674 ஆகும்.திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களுடன் முதல் இடத்தை பிடித்து உள்ளது. லால்குடி சட்டமன்ற தொகுதி குறைந்த வாக்காளர் எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் உள்ளது.புதிதாக 54,818 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 18,597 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-9-2018 அன்று வெளியிடப்பட்டது. அப்போது வாக்காளர் எண்ணிக்கை 21 லட்சத்து 85 ஆயிரத்து 453 ஆக இருந்தது. 31-12-2018 வரை 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 73 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விசாரணை மற்றும் ஆய்விற்கு பின்னர் பெயர் சேர்ப்பதற்காக 54 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறப்பு காரணமாக 10 ஆயிரத்து 541 வாக்காளர்களின் பெயர்களும், இரட்டைப்பதிவு செய்யப்பட்ட 1,159 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 22 லட்சத்து 21 ஆயிரத்து 674 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாதவர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களில் அதற்கான படிவங்களை கொடுத்து தங்களது பெயர்களை சேர்த்து கொள்ளலாம். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இதேபோல் பெயர் நீக்கம், முகவரி மாற்றத்திற்கும் விண்ணப்பம் கொடுக்கலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்யலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிக வாக்காளர்களுடன் முதல் இடத்தை பிடித்து உள்ளது. லால்குடி சட்டமன்ற தொகுதி குறைந்த வாக்காளர் எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத்தொகுதிகளில் இப்போதைய நிலவரப்படி ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 711 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 9 தொகுதிகளிலேயே பெண் வாக்காளர்கள் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 190 பேர் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் உள்ளனர். 9 தொகுதிகளிலும் சேர்த்து கணக்கிட்டால் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே 11 லட்சத்து 37 ஆயிரத்து 378 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 84 ஆயிரத்து 110 பேர் உள்ளனர். குறைந்தபட்சமாக லால்குடி தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களும் இந்த தொகுதியில்தான் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 945 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். 9 தொகுதிகளிலும் சேர்த்து மூன்றாம் பாலினம் எனப்படும் திருநங்கைகள் மொத்தம் 186 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக திருவெறும்பூர் தொகுதியில் 49 திருநங்கைகளும், குறைந்தபட்சமாக மணப்பாறை, துறையூரில் தலா 7 திருநங்கைகளும் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரீரங்கத்தில் 21, திருச்சி மேற்கில் 13, கிழக்கில் 36, லால்குடியில் 12, மண்ணச்சநல்லூரில் 28, முசிறியில் 13 என்ற எண்ணிக்கையில் திருநங்கைகள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவருத்ரய்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...