பட்ஜெட் விவகாரத்திலும் பாஜகவை சீண்டிய தம்பிதுரை!

பிப்ரவரி 02, 2019 280

கரூர் (02 பிப் 2019): பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட் விவகாரத்திலும் பாஜகவை சீண்டும் வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொருளாதார இட ஒதுக்கீட்டில் சலுகை பெற ஆண்டு வருமானம் 8 லட்சம் என்று நிர்ணயித்த அரசு வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பை 5லட்சமாக நிர்ணயித்தது ஏன் என்றும் வருமான வரிக்கான உச்ச வரம்பையும் 8 லட்சம் என்று அறிவிக்காதது ஏன் என்றும் கேள்வி விடுத்துள்ளார்.

வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த பட்ஜெட்டில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தம்பிதுரை குறை கூறினார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில சலுகைகளை வரவேற்ற அவர் தன்னுடைய கரூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் தன்னுடைய தொகுதி மேம்படவில்லை என்று கூறியவர் கொசுவலை உற்பத்தி தொழிலும் ஆடை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ள 6000ரூபாய் போதாது என்று குறை கூறியவர் அதை 12000 ரூபாயாக வழங்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய கஜா புயல் நிவாரண நிதி, ஜி எஸ் டி நிதி உட்பட பல்வேறு தேவைகளுக்காக தரவேண்டிய 9000 கோடி நிதி இன்னமும் தரப்படாமல் உள்ளது என்றும் குறை கூறினார். மேக்கேதாட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்தவர் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.

அதிமுக மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ள நிலையில் தம்பித்துரை எதிராக கருத்து தெரிவித்திருப்பது அதிமுக பாஜக கூட்டணிக்கு தடையாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...