அதிமுக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி? - ஜெயக்குமார் விளக்கம்!

பிப்ரவரி 05, 2019 358

சென்னை (05 பிப் 2019): 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கூற முடியாது மேலும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் திங்கட்கிழமை காலை தொடங்கியது.

மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், விருப்ப மனுக்களை அளிக்கலாம். கட்சித் தலைமை அலுவலகத்தில் வரும் 4-ஆம் தேதி முதல் வரும் 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி விருப்ப மனுக்களை வழங்கினர்.முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்று கொண்டனர். ஏராளமானோர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

பின்னர்அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இன்றைய சூழல் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது, ஏராளமான அதிமுகவினர் விருப்பமனுவை ஆர்வத்துடன் பெற்று வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்களவைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு மனு விநியோகம் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறுவதால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கூற முடியாது. கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீட்டிற்கு பின் மனுக்களை வாபஸ் பெறுவது வழக்கம். தேசியக்கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேசியக்கட்சிகள் என்றால் பாஜக மட்டுமல்ல, பல கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

வரையறுக்கப்பட்ட அதிகாரத்துக்குள் சிபிஐ செயல்பட வேண்டும். வரையறையை தாண்டி மேற்குவங்க அரசு, சிபிஐ செயல்பட்டால் தவறு தான். ஓபிஎஸ் தேசியக் கட்சி என்று கூறியிருப்பதால் அது பல கட்சிகளையும் குறிக்கும். எந்த தேசிய கட்சியுடன் கூட்டணி என்றாலும், அது அதிமுக தலைமையில்தான் அமையும். கூட்டணி குறித்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்ட பிறகு அதுபற்றி அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் - ஷாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...